கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும்.
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.
 
அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். 
பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன.
கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.
 
கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன.
பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.
திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.
முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள் 
'கற்றறிந்தார் ஏத்தும் கலி',  'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
(கலி ,133)

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற